ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்?


22
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 54
முஸ்லீம்களுக்கு நான்கு பெண்கள் வரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவும், மண உறவுக்கு அப்பாற்பட்டு விருப்பப்படி, வரம்பற்று அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ளவும் அனுமதி உண்டு என்பது அனேகருக்கு தெரிந்திருக்கும். ஆனால் முகம்மது எத்தனை பெண்களிடம் மண உறவு கொண்டார் என்பது தெரியுமா? தோராயமாக 31 பெண்கள்.

  1. கதீஜா,
  2. சவ்தா,
  3. ஆய்ஷா,
  4. ஆய்ஷாவின் அடிமைப் பெண்,
  5. உம்மு சலாமா,
  6. ஹஃப்ஸா,
  7. ஜைனப் பிந்த் ஜஹ்ஷ்,
  8. ஜுவைரியா,
  9. உம்மு ஹபீபா,
  10. ஷஃபியா,
  11. மைமூனா,
  12. ஃபாத்திமா,
  13. ஹிந்த்,
  14. ஸனா பிந்த் அஸ்மா,
  15. ஜைனப் பிந்த் கொஸாய்மா,
  16. ஹப்லா,
  17. அஸ்மா பிந்த் நோமன்,
  18. மரியா
  19. ரைஹானா பிந்த் ஸைத்
  20. உம்மு ஷரிக்,
  21. மைமூனா,
  22. ஸைனப்
  23. காவ்லா,
  24. முலைக்கா பிந்த் தாவூத்,
  25. அல் ஷன்பா பிந்த் அம்ர்,
  26. அல் அலிய்யா,
27 அம்ரா பிந்த் யாஸித்,
  1. பெயர் தெரியாத ஒரு பெண்,
  2. குதாய்லா,
  3. சனா பிந்த் சுப்யான்,
31 ஷரஃப் பிந்த் கலீஃபா

உலகிற்கே முன்மாதிரியாய் விளங்கும், ஆன்மீகத்தை போதிப்பதற்காக வந்த முகம்மது, இவ்வளவு பெண்களை ஏன் மணந்து கொள்ள வேண்டும்? இஸ்லாமிய மதவாதிகள் இதற்கு பல காரணங்களைக் கூறுகிறார்கள். அரசியல் காரணங்களுக்காகவும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் அனாதைகளுக்கு வாழ்வளிக்கவுமே இத்தனை பெண்களை மனந்து கொண்டாரேயன்றி உடல் சுகத்துக்காக அல்ல என்று கூறுகிறார்கள். அதில் கொஞ்சமேனும் உண்மை இருக்கிறதா?

அரசியல் காரணங்கள் என்பதன் பொருள் என்ன? பகை கொண்டிருக்கும் இரண்டு அரச குடும்பங்களுக்கிடையில் திருமண உறவு ஏற்பட்டதன் மூலம் பகை மறந்து இணக்கமாயிருப்பது வரலாற்றில் சாதாரண நிகழ்வு. இப்படி ஏதாவது ஒரு நிகழ்வு முகம்மதின் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறதா? முகம்மதின் எந்த திருமணத்தின் மூலம் எந்த இரு குலங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டது விளக்கம் கூற முடியுமா மதவாதிகளால்?

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக முகம்மதின் திருமணம் உதவியதா? மதவாதிகள் இப்படி கூறுவது இஸ்லாத்திற்கே முரணானது. ஏனென்றால், இஸ்லாமிய இறையியலின் படி முகம்மதின் பணி அல்லாவின் செய்தியைப் பரப்புவது தானே தவிர இஸ்லாத்தை விரிவடையச் செய்வதல்ல. இதற்கு முகம்மதின் வாழ்விலேயே ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது. முகம்மதின் நெருங்கிய உறவினர் ஒருவர் மரணத்தருவாயில் இருக்கிறார். அவரை ஒரு முஸ்லீமாக மரணமடையச் செய்ய வேண்டும் என்று கடுமையாக முயற்சிக்கிறார் முகம்மது. ஆனால், முயற்சி பலிக்கவில்லை. அபோது அல்லா கூறுகிறான், ஒருவர் முஸ்லீமாக மாறுவதும் காஃபிராகவே இருந்து விடுவதும் என் விருப்பபடியே. உன் விருப்பபடி எதுவும் நடக்காது. உன் வேலை தூதுச் செய்தியை மனிதர்களிடம் எத்தி வைப்பது மட்டுமே என்றொரு வசனம் இறங்குகிறது. இஸ்லாத்தின் யதார்த்தம் இப்படி இருக்கையில் சிரமப்பட்டு திருமணங்கள் மூலம் இஸ்லாத்தை வளர்க்க வேண்டிய அவசியம் முகம்மதுவுக்கு இல்லையே.

அனாதைகளுக்கு வாழ்வளிக்கவா? இதைவிட அயோக்கியத்தனமான பதில் வேறொன்று இருக்க முடியாது. முகம்மது நடத்திய போர்களால் பல பெண்கள் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரை முகம்மது மணந்திருக்கிறார். இதற்குப் பெயர் அனாதைகளுக்கு வாழ்வளிப்பது என்றால் அவர்களை அனாதைகளாக ஆக்கியதே முகம்மது தானே. போரில் கணவர்களை கொன்றுவிட்டு அவர்களின் மனைவியை மணப்பது அவர்களுக்கு வாழ்வளிப்பதற்கு என்றால், முகம்மதை இதைவிட வேறு யாரும் இவ்வளவு கேவலப்படுத்த முடியாது.

அரசியல் காரணங்களுக்காகவோ, இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவோ, அனாதைகளுக்கு வாழ்வளிக்கவோ முகம்மது அத்தனை திருமணங்களைச் செய்யவில்லை என்றால் வேறு எதற்காக இந்த திருமணங்களைச் செய்தார்? பாலியல் வேட்கைக்காகத் தானே தவிர வேறு எதற்காகவும் இல்லை. இதை ஹதீஸ்கள், குரான் வசனங்கள் மூலமே நிரூபிக்க முடியும். இப்போது கீழ்க்காணும் சில ஹதீஸ்களைக் கவனியுங்கள்.

நபி அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் கூறிய போது நான் அவரிடம், அதற்கு நபி அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று கேட்டதற்கு, அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் பேசிக் கொள்வோம் என அனஸ் கூறினார் என்று கதாதா கூறினார். புஹாரி 268

நபி அவர்கள் ஒரே இரவில் எல்லா மனைவியரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர் என அனஸ் இப்னு மாலிக் கூறினார். புஹாரி 284

அல்லாவின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் ஆருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்துவிட்டது. இப்ன் சாத் எழுதிய “கிதாப் அல் தபக்கத் அல் கபீர்” பக்கம் 438,439

இந்த ஹதீஸ்கள் தெரிவிப்பது என்ன? ஒரே இரவில் ஒன்பதோ அல்லது பதினொன்றோ மனைவிகளுடன் முகம்மது வீடுகூடியிருக்கிறார் என்பதைத்தானே இவை தெரிவிக்கின்றன? மெய்யாகவே உடலியல் ரீதியாக அது அவருக்கு சாத்தியமா எனும் கேள்வியை ஒதுக்கி வைத்து விட்டாலும் இயல்பை மீறிய பாலியல் வேட்கை அவருக்கு இருந்திருக்கிறது என்பதே நமக்கு கிடைக்கும் செய்தி. அதைத்தான் மேற்கண்ட ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.

முகம்மது மக்காவில் இருந்த காலம் வரை, அவரின் முதல் மனைவியான கதீஜா இறக்கும் வரை, ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் ஒரு திருமண பந்தத்தில் மட்டுமே – கதீஜாவுடன் மட்டுமே – வாழ்ந்திருக்கிறார். கதீஜா இறந்த சில மாதங்களுக்குப் பிறகு சவ்தா என்ற பெண்ணுடன் திருமணம். அதன் பின்னர் ஆய்ஷா. இவை தான் மக்காவில் நடந்த திருமணங்கள். இதன் பின்னர் மதீனாவில் அதிகாரம் கைகூடிய பின்னரோ இறப்பது வரை தோராயமாக ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று திருமணங்கள். சரி இப்போது இன்னொரு ஹதீஸைப் பார்ப்போம்.

.. .. .. நாங்கள் நபி அவர்களுடன் புறப்பட்டு அஷ்ஷவ்த் என்றழைக்கப்படும் தோட்டத்தை நோக்கி நடந்தோம் .. . .. அப்போது நபி அவர்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு தோட்டத்திற்குள் சென்றார்கள். அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டு பேரீச்சத் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அப்பெண் உமைமா பிந்த் நுமான் இப்னி ஷராஹீல். அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். அப்பெண் இருந்த வீட்டினுள் நபி அவர்கள் நுழைந்து உன்னை எனக்கு அன்பளிப்புச் செய் என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண் ஓர் அரசி தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா? என்று கேட்டாள். அவளை அமைதிப்படுத்துவதற்காக  தங்களின் கரத்தை அவள் மீது வைக்கப் போனார்கள். உடனே அவள் உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன் என்று கூறினாள். அப்போது நபி அவர்கள் அவளை நோக்கி கண்ணியமானவனிடம் தான் நீ பாதுகாப்பு கோரியிருக்கிறாய் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள் .. .. .. புஹாரி 5255.

இந்த ஹதீஸ் என்ன கூறுகிறது? முகம்மதின் மனைவியர் பட்டியலில் இல்லாத இந்தப் பெண்னை பாலியல் நோக்கில் அணுகியிருக்கிறார் என்பதும், அந்தப் பெண் அதை மறுத்திருக்கிறாள் என்பதும் தெளிவாகிறது. ஒரே இரவில் எல்லா மனைவியர்களின் வீடுகளுக்கு சென்று வந்த பிறகும் கூட வேறொரு புதுப் பெண்ணிடம் கை நீட்டியிருக்கிறார் என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது? பாலியல் வேட்கை தவிர இதற்கு வேறெந்தக் காரணத்தையும் கூற முடியுமா? இதற்கு இஸ்லாமிய மதவாதிகள் அந்தப் பெண்ணுடன் முகம்மதுக்கு ஏற்கனவே திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தது என்று கூறுகிறார்கள். திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தது என்றால் ஏன் அந்தப் பெண் மறுக்கிறாள். அதுவும் தன்னை அரசியாகவும் முகம்மதை இடையராகவும் உவமைப்படுத்தி முகம்மதை கேவலப்படுத்துகிறாள் என்றால் எந்த அடிப்படையில் அது திருமண ஒப்பந்தம்?

முகம்மது இரண்டாவதாக மணம் புரிந்த ஸவ்தாவை அவள் வயது முதிர்ந்துவிட்டாள் என்பதற்காக விவாகரத்து செய்ய எண்ணுகிறார். உடனே ஸவ்தா என்னுடன் கழிக்கும் நாட்களை நான் உனக்கு விட்டுக் கொடுக்கிறேன். உனக்கு விருப்பப்பட்ட மனைவியுடன் அந்த நாளைக் கழித்துக் கொள்ளலாம் அதற்குப் பதிலாக என்னை விவாகரத்துசெய்ய வேண்டாம் உங்களுடைய மனைவி எனும் அந்தஸ்தில் இருக்க விரும்புகிறேன் என்று கேட்டுக் கொள்கிறாள். அதாவது, முகம்மதுவுக்கு பல மனைவிகள் இருந்தனர் என்பதால், ஒவ்வொரு மனைவியிடமும் இத்தனை நாள் தங்கியிருப்பது என்று முறை வைத்துக் கொண்டு தங்கியிருப்பது முகம்மதின் வழக்கம். இந்த அடிப்படையில் சவ்தா தன்னுடன் முகம்மது தங்கியிருக்கும் நாட்களை உனக்கு விருப்பமான மனைவியிடம் தங்கியிருப்பதற்காக எடுத்துக் கொள். அதற்குப் பதிலாக என்னை விவாகரத்து செய்யாமல் உன்னுடைய மனைவி எனும் அந்தஸ்திலேயே இருக்கச் செய் என்று கூறுகிறாள். இதை அங்கீகரித்து ஒரு குரான் வசனமும் இறங்குகிறது.

ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தால் அப்பொழுது அவ்விருவரும் தங்கள் இருவருக்கிடையே ஏதேனும் ஒரு சமாதனத்தை உண்டாக்கிக் கொள்வது அவ்வருவரின் மீதும்  குற்றமில்லை .. .. .. குரான் 4:128

இந்த ஸவ்தா வயதானவளாகவும் அழகற்றவளாகவும் இருந்தாள் என்பதே முகம்மது விவாகரத்து செய்ய எண்ணியதற்கான காரணம். இதில் முகம்மதை எந்த எண்ணம் உந்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினமா என்ன?

ஜுவைரியாவை முகம்மது மணந்த கதையும் முகம்மதின் பாலியல் நாட்டத்தை நமக்கு தெரிவிக்கிறது. பனூ முஸ்தலிக் எனும் யூத குலத்தின் மீது திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி போர் தொடுக்கிறார் முகம்மது. அதில் முஸ்லீம்கள் வெற்றியடைகிறார்கள். பல்லாயிரம் கால்நடைகள் உட்பட பிடிபட்டவர்கள் அனைவரும் அடிமைகளாக்கப்படுகின்றனர். இந்தப் போரில் அடிமைகளாக பிடிபட்டவர்களில் ஃபாரா எனும் பெண்ணும் அடக்கம். இவள் அந்த யூத குலத்து தலைவனின் மகள், நடந்த போரில் இவள் கணவன் கொல்லப்பட்டு விட்டான். அடிமைகளைப் பங்கிடும் போது இவள் ஒரு குதிரை வீரனுக்கு ஒதுக்கப்படுகிறாள். ஆனால் ஒரு தலைவனின் மகளான தன்னை சாதாரண வீரனுக்கு அடிமையாக்கியது தகாது என எண்ண அவளை முகம்மது ஜுவைரியா என்று பெயர் மாற்றி மணந்து கொள்கிறார். மட்டுமல்லாது மதீனா திரும்பும் வழியிலேயே அவர்களுக்குள் உறவும் நடக்கிறது. இந்த விபரங்கள் புஹாரி நூல் 46 எண் 717 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண், அவள் கணவன் போரில் கொல்லப்பட்ட அதே நாளில் அல்லது மறு நாளில் திருமணம் செய்து உறவும் கொள்ளுதல் என்பது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கொடூரமான அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்வில் முகம்மதுவிடம் வெளிப்பட்டது என்னவிதமான மனோநிலை? காமத்தைதவிர வேறு ஏதாவது இதை உந்தியிருக்குமா?

இதோபோல் ஷஃபியாவுடனான திருமண நிகழ்வும் முகம்மதின் பாலியல் வேட்கையை வெளிப்படுத்துகிறது. கைபர் போரில் பெரிய அளவில் போர் புரியாமலேயே எளிதில் பனூ நதீர் எனும் யூத குல மக்கள் முகம்மதின் கைகளில் விழுகிறார்கள். இந்த யூத குழுவின் தலைவனான கினானா இப்ன் அல் ரபீ பனூ நதீர் குலத்தின் கருவூலத்தை காண்பிக்கும்படி சித்திரவதை செய்யப்படுகிறான். இந்த சித்திரவதை தாங்காமல் கினானா இறந்தும் விடுகிறான். இந்த கினானாவுடைய மனைவி தான் ஷஃபியா. வழக்கம் போல அடிமைகள் பகிர்ந்தளிப்பில் ஷஃபியா திஹ்யா என்பவருக்கு ஒதுக்கப்படுகிறாள். ஆனால் ஷஃபியா குறித்து முகம்மதின் சீடர்கள் முகம்மதிடம் விபரம் தெரிவிக்க அவர்களை அழைத்து வருமாறு பணிக்கிறார் முகம்மது. திஹ்யா, ஷஃபியா, கினானாவின் சகோதரி ஆகியோரை போர்க்களத்தினூடே அழைத்து வருகிறார். தனக்கு வேண்டியவர்கள் எல்லாம் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்க அதனிடையே அழைத்து வரப்படும் கினானாவின் சகோதரி வாய்விட்டு கதறி அழுகிறார், ஷஃபியாவோ அழவும் திராணியற்றி வெறித்துப் பார்த்தவாறு வருகிறார். அழும் இந்த ஷைத்தானை வெளியேற்றுங்கள் என்று தன் அடிமை பிலாலுக்கு உத்திரவிட்டுவிட்டு ஷஃபியாவை தன் மனைவியாக அறிவிக்கிறார். இந்த நிகழ்வில் யூத முஸ்லீம் சமூக நல்லிணக்கம் பொங்கி வழிகிறதா? அல்லது காமமா?

முகம்மது அரசியல் காரணங்களுக்காகத் தான் பல திருமணங்களை செய்து கொண்டார் என்பது இன்று அது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் செய்யும் சப்பைக்கட்டு. என்ன காரணங்கள் கூறப்பட்டாலும் காமமே அதில் மிகைத்திருந்தது என்பது உறுதி. இதை கீழ்காணும் குரான் வசனங்கள் உறுதி செய்கிறது.

இது மற்ற மூஃமீன்களுக்கன்றி உமக்கே. அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே .. .. .. குரான் 33:50

ஏனைவர்களுக்கு நான்கு திருமணத்திற்கு மேல் கூடாது என்று வரம்பு விதித்திருந்தாலும் நிர்ப்பந்தம் ஏதும் ஏற்பட்டு விடாதிருக்கும் பொருட்டு நான்கு எனும் வரம்பு முகம்மதுக்கு இல்லை என்று விதி விலக்களிக்கிறது இந்த வசனம். அப்படி என்ன நிர்ப்பந்தம் முகம்மதுக்கு இருந்தது? அரசியல் நிர்ப்பந்தமா? இஸ்லாத்தை வளர்த்தெடுக்க வேண்டுமே எனும் கவலையா? தாம் மணம் முடிக்காவிட்டால் அவர்கள் அனாதைகளாகவே இருந்துவிட நேருமே எனும் பதைபதைப்பா? என்ன நிர்ப்பந்தம் இருந்தது முகம்மதுக்கு? நாற்பது ஆண்களின் பலம் முகம்மதுவுக்கு இருந்தது என்பதை பொருத்திப் பார்த்தால் அவருக்கு ஒரே ஒரு நிர்ப்பந்தம் மட்டுமே இருந்திருக்க முடியும். இன்னோரு குரான் வசனத்தை பார்ப்போம்.

இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆக மாட்டார்கள். இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும். அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே – ஹாலால் இல்லை – மேலும் அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். குரான் 33:52

இதில் கவனிக்க வேண்டிய ஒரு வாக்கியம் “அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே” என்பது. ஆக முகம்மதின் திருமணங்களில் அவர்களின் அழகு முகம்மதை கவர்வது முக்கியமான அம்சமாக இருந்திருக்கிறது என்பது இந்த வசனத்தின் மூலம் உறுதியாகிறது. இதற்கு வெளியே மதவாதிகள் என்ன வியாக்கியானங்களை, சப்பைக்கட்டுகளைக் கூறினாலும் அது குரானுக்கு முரணான கருத்தாகவே இருக்கும். இதன் மூலம் முகம்மதின் திருமணங்களில் காமமே மிகுந்து இருந்திருக்கிறது. அதுவும் சராசரி மனிதனுக்கு இருப்பதைவிட வெகு தூக்கலாய். இது தான் ஒரு யுக முன் மாதிரி மனிதனுக்கான தகுதியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக